ஜார்க்கண்டில் காலை 9 மணிவரை 13.03 % ஓட்டுகள் பதிவு


ஜார்க்கண்டில் காலை 9 மணிவரை 13.03 % ஓட்டுகள் பதிவு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:46 AM IST (Updated: 7 Dec 2019 10:46 AM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலுக்கான 2வது கட்ட ஓட்டு பதிவில் காலை 9 மணிவரை 13.03 % ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் சட்டசபைக்கான மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன.  இதற்கான முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த நவம்பர் 30ந்தேதி தொடங்கியது.  தொடர்ந்து, டிசம்பர் 20ந்தேதி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23ந்தேதி நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது.  சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக ஜே.எம்.எம். கூட்டணி போட்டியிடுகிறது.  இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி. ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், 2வது கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  இதற்காக காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

18 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டு பதிவானது மாலை 3 மணிவரையும், ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் ஜாம்ஷெட்பூர் மேற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் மாலை 5 மணிவரையும் ஓட்டு பதிவு நடைபெறும்.  இவற்றில், ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் முதல் மந்திரி ரகுபர் தாஸ் போட்டியிடுகிறார்.

சட்டசபை சபாநாயகர் தினேஷ் ஓரன் (சிசாய்) கிராம வளர்ச்சி மந்திரி நீல்கந்த் சிங் முண்டா (குந்தி) மற்றும் பா.ஜ.க.வின் மாநில தலைவர் லட்சுமண் கிலுவா (சக்ரதார்பூர்) ஆகியோர் காலையிலேயே வந்து வாக்களித்து விட்டு சென்றனர்.

வாக்காளர்கள் அதிக அளவில் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்யும்படி பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று கேட்டு கொண்டார்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலுக்கான 2வது கட்ட ஓட்டு பதிவில் காலை 9 மணிவரை 13.03 % ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

Next Story