முதல் மந்திரியாக பதவியேற்ற பின்பு முதன் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே


முதல் மந்திரியாக பதவியேற்ற பின்பு முதன் முறையாக பிரதமர் மோடியை சந்தித்த உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 7 Dec 2019 9:50 AM GMT (Updated: 7 Dec 2019 9:50 AM GMT)

மராட்டிய மாநிலம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை புனே விமான நிலையத்தில் நேரில் சந்தித்து உத்தவ் தாக்கரே வரவேற்பு அளித்தார்.

புனே,

மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான தேசிய மாநாட்டை நடத்தி வருகிறது. இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம். தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வந்த இந்த மாநாடு, மோடி பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த மாநாடு குஜராத்தில் உள்ள கெவாடியாவில் ஒற்றுமை சிலைக்கு அருகே நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு புனே நகரில் உள்ள பாஷன் பகுதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ. எஸ்.இ.ஆர்) வளாகத்தில்  6 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மராட்டியம் வந்தார்.  

மராட்டிய மாநிலம் புனே விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வரவேற்றார். இதேபோல், மராட்டிய  முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர். 

மராட்டியத்தில் 30 ஆண்டுகளாக பாஜகவும் சிவசேனாவும் கூட்டணியில் இருந்தன. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக -சிவசேனா கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும் அதிகார பகிர்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரு கட்சிகளும் கூட்டணியை முறித்துக்கொண்டன.  இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.


Next Story