கர்நாடகா: 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் - நாளை வாக்குகள் எண்ணிக்கை


கர்நாடகா:  15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் - நாளை வாக்குகள் எண்ணிக்கை
x
தினத்தந்தி 8 Dec 2019 5:50 PM GMT (Updated: 8 Dec 2019 5:50 PM GMT)

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன. இதனிடையே புதிய அரசாக பா.ஜனதா பொறுப்பேற்றுக் கொண்டது. அம்மாநில முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற தேர்தலில்  67.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை எண்ணும் பணி, 11 மையங்களில் நாளை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை  நடைபெற உள்ளது. முன்னணி நிலவரம் பிற்பகலுக்குள் தெரிய வந்துவிடும். கர்நாடகத்தில் ஆட்சியிலிருக்கும் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு தனிபெரும்பான்மை பெற 6 இடங்கள் தேவைப்படுகின்றன. ஆதலால் இந்த தேர்தல் முடிவு, எடியூரப்பா அரசுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

சில கருத்துக்கணிப்புகளின்படி, பா.ஜனதா 9-12 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த எடியூரப்பா, குறைந்தது 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story