வடகிழக்கு மாநிலங்களின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்


வடகிழக்கு மாநிலங்களின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்
x
தினத்தந்தி 8 Dec 2019 11:30 PM GMT (Updated: 8 Dec 2019 9:36 PM GMT)

வடகிழக்கு மாநிலங்களின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசுகிறார். பின்னர், பிற்பகலில் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மக்களவையின் அலுவல் பட்டியலில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மசோதாவை இன்றே நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மசோதாவின்படி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அவர்கள் பிராந்தியத்துக்கு இந்த மசோதா பொருந்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏனென்றால், அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் பழங்குடியின பகுதிகள், அரசியல் சட்டத்தின் 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இருப்பதாலும், அருணாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் கிழக்கு வங்காள எல்லைப்புற ஒழுங்குமுறை ஒப்பந்தத்துக்கு உட்பட்டதாலும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி குடியுரிமை அளிக்கப்படும் அகதிகளுக்கு, அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து சட்ட பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 1985-ம் ஆண்டு போடப்பட்ட அசாம் ஒப்பந்தத்துக்கு முரணாக இருப்பதாக, அசாம் மாநில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு, நாளை (செவ்வாய்க்கிழமை) 11 மணி நேர முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தில் அமல்படுத்தவிட மாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்புக்கிடையே மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்கிடையே, மசோதா தொடர்பான எதிர்ப்புகளை பா.ஜனதா நிராகரித்துள்ளது. பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியதாவது:-

மத அடிப்படையில் நாட்டை பிரிக்கும் முடிவால் பாதிக்கப்பட்ட அண்டை நாட்டு சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமை, இந்தியாவுக்கு இருக்கிறது. அதற்காக, மசோதாவை கொண்டு வருகிறோம். இதேபோன்ற ஒரு மசோதாவை, நேரு அரசு 1950-ம் ஆண்டு கொண்டு வந்து நிறைவேற்றியது.

அப்போது, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளதேச பகுதியில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்த மசோதா வகை செய்தது. அதில், அங்கிருந்து வந்த சிறுபான்மையினருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியதாவது:-

மதஅடிப்படையில் குடியுரிமை வழங்குவது, இந்தியாவை ‘பாகிஸ்தானின் இந்துத்துவா வடிவம்’ ஆக்கி விடும். மசோதா நிறைவேறினால், மகாத்மா காந்தியின் சிந்தனையை முகமது அலி ஜின்னாவின் சிந்தனை வெற்றி கொண்டதாக ஆகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story