மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு


மோடியுடன் பேசிய பாதி விஷயத்தை சரத்பவார் மறைத்துவிட்டார் -பட்னாவிஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Dec 2019 2:07 AM GMT (Updated: 9 Dec 2019 2:07 AM GMT)

சரத்பவார் பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து, பாதி விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டார் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை,

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் சரத்பவார், பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு மற்றும் அஜித்பவார் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தது குறித்து மராத்தி டி.வி. சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் எந்த கட்சியில் இருந்தும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்யவில்லை. மேலும் எந்த கட்சியையும் உடைக்கவும் நினைக்கவில்லை. அஜித்பவார் தான் எங்களிடம் வந்து பேசினார். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்கு 2 நாட்களுக்கு முன் அஜித்பவார் எங்களை அணுகினார்.

அப்போது அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக கூறினார். அவர் தேசியவாத காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களையும் என்னிடம் பேச வைத்தார். மேலும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் அவரது நிலைப்பாடு சரத்பவாருக்கு தெரியும் எனவும் கூறினார். இது ஒரு சூதாட்டம் போன்றது என்பது எங்களுக்கு தெரியும். எனினும் அரசியலில் இது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

சமீபத்தில் பிரதமர் மோடி தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாக, சரத்பவார் கூறினார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து சரத்பவார் ஊடகங்களில் கூறியது ஒரு பகுதிதான். அவர் பிரதமருடன் பேசியதில் பாதி விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டார்.

அவர்கள் சந்திப்பில் என்ன நடந்தது என்பதை நான் கூறுவது சரியாக இருக்காது. எனினும் தகுந்த நேரத்தில் இதுகுறித்து பேசுவேன். தேர்தல் முடிவு வந்த பிறகு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எனது போன் அழைப்புகளை எடுத்து பேசாதது, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து கொண்டது வருத்தமளித்தது”இவ்வாறு அவர் கூறினார்.


Next Story