மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார் ராகுல்காந்தி?


மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார் ராகுல்காந்தி?
x
தினத்தந்தி 9 Dec 2019 9:46 AM GMT (Updated: 9 Dec 2019 10:08 AM GMT)

மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சோதனையாக அமைந்து விட்டது. அந்தக் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தொடர்ந்து 2-வது முறையாக பெற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டது.

கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான அமேதியை தக்க வைக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்துள்ளார்.  ஆனால் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டத்தில்  வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இதையடுத்து தலைவராக யாரும் பொறுப்பு ஏற்க முன்வராததால், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி அமர்ந்தார். 

மிகப்பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுக்கிற விதத்தில் கட்சியின் முன்னணி தலைவர்களை வழிநடத்தவோ, நாடாளுமன்றத்தில் கட்சியின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்து வைக்க ஏற்ற வகையில் எம்.பி.க்களை முடுக்கி விடவோ தலைமையின்றி கட்சி தத்தளித்து வருகிறது.

இந்நிலையில், நடைபெற்ற அரியானா மற்றும் மராட்டிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அரியானாவில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஜேஜேபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டது.

மராட்டியத்தில்  பெரும் கூட்டணியான சிவசேனா- பாஜக ஆட்சி அமைக்க முடிய வில்லை. இங்கு, தனக்கு எதிராக போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து சிவசேனா கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

அண்மைக் காலமாக பாஜகவுக்கு ஏற்பட்ட சரிவை கண்டு ராகுல் தற்போது உற்சாகம் அடைந்துள்ளார். இதேநிலை, தற்போது ஐந்து கட்ட தேர்தலாக நடைபெற்று வரும் ஜார்கண்டிலும் நிகழும் என்பது ராகுலின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தச் சூழலில் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்க சம்மதித்து இருப்பதாகத் தெரிகிறது.

சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் முதல் -மந்திரி பூபேஷ் பேகல்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ராகுல்காந்தி ஒருவரால்தான் காங்கிரஸ் கட்சியை மு ன்ªனடுத்து செல்ல முடியும். கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும்
முழு மனதோடு அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.  எனவே, ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க முன்வர
வேண்டும்.

ஏனென்றால், நாடு முழுவதும் உள்ள தொண்டர் கள் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்த நாட்டை ராகுல்காந்தி நன்றாக புரிந்து வைத்துள்ளார். நாட்டு மக்களும் அவரை விரும்புகிறார்கள்.

தேச பிரச்சினைகளை  திறந்த மன தோடு அவர் பேசுகிறார். இந்த சூழ் நிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்று
ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு  அவர் கூறினார்.

இது குறித்து  காங்கிரஸ் கட்சி  வட்டாரங்கள் கூறியதாவது:-

மராட்டிய மாநில  கூட்டணி ஆட்சி அமைய சோனியாவுடன் ராகுலும் பெரும் பங்காற்றினார். இதன் பலனால், ராகுல் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு ஜார்கண்ட் தேர்தலில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களும் கட்சியின் தலைமை பதவியில் ராகுலின் மறுவரவை பற்றி பேசத் துவங்கி உள்ளனர்” எனத் தெரிவித்தன.

தலைவர் பதவி ராஜினாமாவுக்கு பின்னர் ராகுல் முதன்முறையாக மராட்டிய மாநிலத்தில்  கூட்டணி ஆட்சி அமைய முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவரது பரிந்துரையின் பேரில்தான் சட்டப்பேரவையின் சபாநாயகராக நானா பட்டேலே, மாநில மந்திரிகளாக நிதின் ரவுத், பாலா சாஹேப் தொராட் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அம்மூவரும் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதே காரணம். அதேபோல், மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு சற்று மவுனம் காத்த ராகுல், கேள்விகள் எழுப்புவதையும் நிறுத்தி இருந்தார்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளிநாட்டுக்கும் சென்று விட்ட அவர் தற்போது மீண்டும் ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளார். கடந்த வாரம் மக்களவையில் கோட்சேவை பற்றி பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் கூறிய சர்ச்சைக் கருத்தை ராகுல் ஆவேசமாகக் கண்டித்திருந்தார்.

எனவே, விரைவில் ராகுல் தலைவர் பதவியில் அமருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவருக்காக, காரியக் கமிட்டியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை அகில இந்திய காங்கிரசின் பொதுக்குழு ஏற்றுக் கொண்டாலே போதுமானது எனக் கருதப்படுகிறது. எனவே, காங்கிரசின் தலைவர் பதவிக்கு ராகுல், இரண்டாவது முறையாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story