73-வது பிறந்த நாள்: சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து - காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வாழ்த்தினர்


73-வது பிறந்த நாள்: சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து - காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வாழ்த்தினர்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:03 AM GMT (Updated: 9 Dec 2019 9:30 PM GMT)

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு நேற்று 73-வது பிறந்த நாள் ஆகும். ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருவதால், சோனியா தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.

சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த உடல் நலத்துக்காக பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தது. இது தொடர்பாக கட்சியின் டுவிட்டர் தளத்தில், ‘காங்கிரசின் நீண்டகால தலைவரான சோனியாவின் முன்மாதிரியான வலிமையான குணநலன்கள் காங்கிரசின் பிற தலைவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. அவரது வலிமை, கண்ணியம், இரக்கம் மற்றும் கருணை போன்ற குணநலன்கள் எங்களை இணைத்து இருப்பதுடன், வலிமையும் கொடுக்கிறது. அவருக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.

இதைப்போல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் குமாரி செல்ஜா, மணிஷ் திவாரி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், துணை முதல்-மந்திரி சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் ஆகியோர் காலையிலேயே சோனியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்தனர்.

இதைத்தவிர தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் காங்கிரஸ் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.


Next Story