ஆந்திராவில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவப்படம் அச்சிடப்பட்டிருந்ததால் சர்ச்சை


ஆந்திராவில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவப்படம் அச்சிடப்பட்டிருந்ததால் சர்ச்சை
x
தினத்தந்தி 10 Dec 2019 5:37 AM GMT (Updated: 10 Dec 2019 5:37 AM GMT)

ஆந்திர பிரதேசத்தில் இயேசு கிறிஸ்துவின் உருவம் அச்சிடப்பட்ட குடும்ப அட்டையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் உருவப்படம் அச்சிடப்பட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆந்திர அரசாங்கம் இதனை மறுத்துள்ளது.

மேலும் இது தெலுங்கு தேசம் கட்சியினர் பரப்பி வரும் பிரச்சாரம் என்று கூறியுள்ளது. இது குறித்து ஆந்திர அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“வத்லமாறு பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை அச்சிட்டு அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

அந்த நபர் மதம் மாறிய கிறிஸ்தவர் அல்ல, அவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஆவார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு அதே நபர் தான் குடும்ப அட்டைகளில் சாய் பாபாவின் உருவத்தையும், 2017-18 இல் விஷ்ணுவின் உருவத்தையும் அச்சிட்டுள்ளார். தற்போது இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செயலுக்கு அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Next Story