இந்தியர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுவதையே விரும்புகின்றனர் - ஆய்வுத் தகவல்..!


இந்தியர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுவதையே விரும்புகின்றனர் - ஆய்வுத் தகவல்..!
x
தினத்தந்தி 10 Dec 2019 8:25 AM GMT (Updated: 10 Dec 2019 8:25 AM GMT)

இந்தியர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுவதையே அதிகம் விரும்புகின்றனர் என் ஆய்வில் தெரியவந்து உள்ளது.

புதுடெல்லி

உபர் ஈட்ஸ் சர்வதேச ஆய்வு நிறுவனமான இப்சாஸ்  உடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. இந்தியர்களின் மனநிலை உணவு விஷயத்தில் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு நடத்தப்பட்டது. . இதற்காக 13 நகரங்களில் 4000 வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ’இந்திய உணவு மனநிலை’ என்ற பெயரில் ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது.

அதிகமான இந்தியர்கள் வெளியே சாப்பிடுவதை விட வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிட  விரும்புகிறார்கள். 76 சதவீதம் பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுவதை விரும்புகிறார்கள்.   13 சதவீதத்தினர் அலுவலகம் போன்ற மற்ற இடங்களில்  ஆர்டர் செய்து சாப்பிடுவதாகவும் 5 சதவீதம் நண்பர்களின் வீட்டில் ஆர்டர் செய்து சாப்பிடுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக தம்பதிகள் வீட்டில் ஓய்வாக பொழுதைக் கழிக்கவும், நேரத்தை மிச்சம் செய்வதற்காகவும் ஆர்டர் செய்வதாகவும், குறிப்பிட்ட உணவகங்களை கண்டறிந்து அதிலேயே தொடர்ந்து ஆர்டர் செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீட்டிற்கு சமைக்க ஆள் அமர்த்துவதும், ஆர்டர் செய்து சாப்பிடுவதும் ஒரே பணச் செலவுதான் என்ற காரணத்திற்காகவும் ஆன்லைன் ஆர்டரை விரும்புகின்றனர் என இப்படி பல காரணங்களை மக்களின் மனநிலையாக முன் வைக்கிறது உபர் ஈட்ஸ்.

”மக்கள் வாரத்தில் ஒரு முறையேனும் வீட்டு உணவு அல்லாமல் வெளியே சாப்பிட முடிவு செய்கின்றனர். அப்படியான வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேலையை இன்னும் சுலபமாக்கும் விதமாக ஒட்டல் உணவுகளை வீட்டிற்கே கொண்டு வரும் எங்களைப் போன்ற ஆன்லைன் நிறுவனங்களை நாடுகின்றனர்” என்று உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பன்ஸி கோட்டெச்சா கூறியுள்ளார்.

Next Story