குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆயிரம் அறிஞர்கள் மனு - இந்தியா இனவாத நாடாக மாறிவிடும் என எச்சரிக்கை


குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆயிரம் அறிஞர்கள் மனு - இந்தியா இனவாத நாடாக மாறிவிடும் என எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2019 3:45 AM IST (Updated: 11 Dec 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆயிரம் அறிஞர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் இந்தியா இனவாத நாடாக மாறிவிடும் என எச்சரித்துள்ளனர்.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி ஆயிரம் விஞ்ஞானிகள், அறிஞர்கள் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர். இந்தியா இனவாத நாடாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் ஆயிரம் விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

இதில் ஹார்வர்டு பல்கலைக்கழகம், மாசேசூசெட்ஸ் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம், டெல்லி பல்கலைக்கழகம், சென்னை கணிதவியல் கல்வி நிலையம், சர்வதேச அறிவியல் பாட மையம், ஹீப்ரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், அறிஞர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்தியா சுதந்திர போராட்டத்தில் இருந்து வெளிப்பட்டது முதல் அரசியல்சாசனத்தை பேணி பாதுகாத்து வருகிறது. அனைத்து மதங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படும் நாடாக இருந்து வருகிறது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதுபோல மதத்தை குடியுரிமைக்கான ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டால் இந்த வரலாற்றில் ஒரு தீவிர இடைவெளி ஏற்பட்டுவிடும்.

மேலும் அரசியல்சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கே முரண்பாடானதாக ஆகிவிடும். குறிப்பாக மசோதாவின் நோக்கமான முஸ்லிம்களை நீக்குவது நாட்டின் பன்முகத்தன்மை என்ற நூலிழைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவிடும் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே இந்த குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் உரிமைகள் ஆர்வலரான ஹர்ஷ் மாண்டெர் கூறும்போது, “இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் நான் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவேன். நான் ஒரு முஸ்லிம் என்று பதிவு செய்தால், நான் எனது ஆவணங்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய மறுத்தால், ஆவணங்கள் இல்லாத முஸ்லிம் என்ற அடிப்படையில் எனக்கும் அதே தண்டனை விதிக்கப்படும். மசோதாவை திரும்பப்பெற வேண்டும். ஒத்துழையாமை இயக்கத்தில் சேருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல கல்வியாளர் பிரதாப் பானு மேத்தா கூறும்போது, “கடந்த காலத்தை நாம் எப்போதும் விவாதிக்க முடியும். ஆனால் இந்த மசோதா இந்தியாவின் அரசியல்சாசன ஜனநாயகத்தை அரசியல்சாசனத்துக்கு விரோதமான இனவாத நாடாக அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு எடுக்கப்படும் மிகப்பெரிய நடவடிக்கை” என்றார்.


Next Story