குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்


குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
x
தினத்தந்தி 11 Dec 2019 12:29 PM IST (Updated: 11 Dec 2019 12:29 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

புதுடெல்லி,

வட கிழக்கு மாநிலங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள மசோதா, குடியுரிமை திருத்த மசோதா ஆகும். நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் விழுந்தன.

இந்த மசோதாவை இன்று நண்பகல் 12 மணியளவில் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீது விவாதத்திற்கு வாக்கெடுப்பு நடைபெறும்.  இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற  மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  அதே நேரத்தில் மக்களவையை போன்று இந்த மசோதா மாநிலங்களவையில் எளிதாக நிறைவேறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 238 ஆகும். 238 பேரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்கிறபோது 120 ஓட்டுகள் விழுந்தால்தான் மசோதா நிறைவேறும்.

இதில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு மொத்தம் 105 உறுப்பினர்கள் உள்ளனர். (பாரதீய ஜனதா-83, ஐக்கிய ஜனதாதளம்-6, சிரோமணி அகாலிதளம்-3, லோக்ஜனசக்தி-1, இந்திய குடியரசு கட்சி (அத்வாலே)-1, நியமன உறுப்பினர்கள்-11). 11 இடங்களை கொண்டுள்ள அ.தி.மு.க., 7 உறுப்பினர்களை கொண்டிருக்கிற பிஜூஜனதாதளம், தலா 2 இடங்களை பெற்றிருக்கிற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சிகளுடன் ஆளும் பாரதீய ஜனதா கட்சி பேச்சு நடத்தி வருகிறது.

இந்த கட்சிகள் ஏற்கனவே குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்து ஓட்டு போட்டுள்ளன. எனவே மாநிலங்களவையிலும் ஆதரித்து ஓட்டு போடும் என பாரதீய ஜனதா கட்சி எதிர்பார்க்கிறது.

Next Story