குஜராத் கலவரத்தில் மோடி அரசுக்கு தொடர்பு இல்லை - நானாவதி கமிஷன் அறிக்கை, சட்டசபையில் தாக்கல்


குஜராத் கலவரத்தில் மோடி அரசுக்கு தொடர்பு இல்லை - நானாவதி கமிஷன் அறிக்கை, சட்டசபையில் தாக்கல்
x
தினத்தந்தி 12 Dec 2019 4:30 AM IST (Updated: 12 Dec 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் கலவரத்தில் அப்போதைய மோடி அரசுக்கு தொடர்பு இல்லை என்று நானாவதி கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காந்திநகர்,

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் நிலையத்தில் ராம பக்தர்கள் வந்த ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது. 59 ராம பக்தர்கள் தீயில் கருகி பலியானார்கள். இதற்கு பதிலடியாக, மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த கலவரம் பற்றி விசாரிக்க அப்போது முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி தலைமையிலான விசாரணை கமிஷனை அமைத்தார். அதில், குஜராத் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அக்‌ஷய் மேத்தா உறுப்பினராக இடம்பெற்றார். கலவரத்தில், மோடி அரசுக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் போலீஸ் அதிகாரிகள் சஞ்சய் பட், ராகுல் சர்மா, ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் குற்றம் சாட்டினர். எதிர்க்கட்சிகளும் இதே குற்றச்சாட்டை சுமத்தின.

நானாவதி கமிஷன் தனது அறிக்கையின் முதல் பகுதியை 2009-ம் ஆண்டு அளித்தது. இறுதி அறிக்கையை 2014-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி, அப்போதைய முதல்-மந்திரி ஆனந்திபென் படேலிடம் சமர்ப்பித்தது. ஆனால், சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இதனால், முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.ஸ்ரீகுமார், நானாவதி கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, குஜராத் ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதாக ஐகோர்ட்டில் குஜராத் அரசு உறுதி அளித்தது.

அதன்படி, நேற்று குஜராத் சட்டசபையில், மாநில உள்துறை மந்திரி பிரதீப்சிங் ஜடேஜா, நானாவதி கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒட்டுமொத்த அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்த அடிப்படையில் பார்த்தால், கோத்ரா சம்பவத்துக்கு பிந்தைய கலவரங்கள், கோத்ரா சம்பவத்தின் விளைவாகவே தெரிகிறது. கோத்ரா சம்பவத்தால், ஆத்திரம் அடைந்த பெருமளவிலான இந்துக்கள், இறுதியாக, முஸ்லிம்கள் மீதும், அவர்களது உடைமைகள் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தினர். மற்றபடி, இது முன்கூட்டியே திட்டமிட்ட சதியோ அல்லது ஒத்திகை பார்த்து நடத்தப்பட்ட வன்முறையோ அல்ல.

வன்முறை சம்பவங்களை எந்த மந்திரியும் தூண்டி விட்டதாகவோ, உடந்தையாக இருந்ததாகவோ கூறுவதற்கு ஆதாரம் இல்லை. மாநில அரசுக்கு இதில் பங்கு இல்லை. எந்த அரசியல் கட்சியோ, மத அமைப்புகளோ சம்பந்தப்பட்டு இருப்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளில் உள்ளூர் அளவிலான தொண்டர்கள் சிலர், தங்களது பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதை ஆணையத்தின் முன்பு வைக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் நிச்சயமாக சொல்ல முடியும்.

கலவரம் தொடர்பாக மாநில அரசு பாராமுகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. முன்னாள் போலீஸ் அதிகாரிகள் கூறுவது நம்பும்படி இல்லை. போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாக கூற முடியாது.

சொல்லப்போனால், அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் கட்டுப்படுத்தக்கூடிய ஒழுக்கமான காவல்துறை, குஜராத்துக்கு கிடைத்துள்ளது. எங்கேயாவது வன்முறையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தால், அது போலீசார் எண்ணிக்கை குறைவாகவோ, ஆயுதங்கள் இல்லாமலோ இருந்ததுதான் காரணமாக இருக்கும்.

ஆமதாபாத் நகரில் நடந்த சில கலவர சம்பவங்களை பொறுத்தவரை, அதை கட்டுப்படுத்த தேவையான திறமையையோ, ஆர்வத்தையோ போலீசார் காட்டவில்லை என்பது தெரிகிறது. இந்த விசாரணை கமிஷன் அமைத்ததால், சில போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தவறு செய்த அந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தலாம் அல்லது நடவடிக்கை எடுக்கலாம்.

இதுபோன்ற கலவர சமயங்களில், பத்திரிகைகள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்கிறதா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பத்திரிகைகள், எல்லை மீறுவதாக தெரிந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல், பத்திரிகைகள், கலவரத்தை பெரிதாக்கும் வகையில் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story