‘பிரதமர் மோடிக்கு மாற்று, ராகுல் காந்தி மட்டுமே’அசோக் கெலாட் சொல்கிறார்
‘பிரதமர் மோடிக்கு மாற்று, ராகுல் காந்தி மட்டுமே’ என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.
மும்பை,
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியுமான அசோக் கெலாட், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தி குறித்தும், அவரது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
இது தொடர்பாக கெலாட் கூறுகையில், ‘பிரதமர் மோடிக்கு மாற்று தலைமை இல்லை என கூறுவது தவறு. ராகுல் காந்திதான் அவருக்கு சரியான மாற்று. மோடி மற்றும் அமித்ஷாவை தைரியமாகவும், அச்சமின்றியும் எதிர்க்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். அதேநேரம் மோடியின் வித்தியாசமான அணுகுமுறையால் ராகுல் காந்தியால் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை என்பது உண்மை’ என்று தெரிவித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தியின் கடின உழைப்பால் பா.ஜனதா தோற்கும் நிலை இருந்ததாக கூறிய கெலாட், ஆனால் மோடி குறித்து மணிசங்கர் அய்யர் கூறிய கருத்தை முன்வைத்து உணர்வுப்பூர்வமாக மோடி பிரசாரம் மேற்கொண்டதால்தான் பா.ஜனதா வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்வைத்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டதாகவும், ஆனால் துல்லிய தாக்குதல், தேசியவாதம் போன்றவற்றால் மேற்படி பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் கெலாட் கூறினார்.
Related Tags :
Next Story