குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு ; மும்பை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா


குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு ; மும்பை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா
x
தினத்தந்தி 12 Dec 2019 3:54 AM GMT (Updated: 12 Dec 2019 3:54 AM GMT)

குடியுரிமை மசோதா வகுப்பு வாத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மசோதா என்று விமர்சித்துள்ள ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மும்பை,

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

இப்படி குடியேறியவர்களில் பெரும்பாலோர் வட கிழக்கு மாநிலங்களில் குடியேறியதால், அங்கு இந்த மசோதாவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

 மும்பையில் காவல்துறையில் சிறப்பு ஐ.ஜி.பியாக  பணியாற்றி வந்த  அப்துர் ரஹ்மான் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி,  மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியதை அறிந்த உடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக டுவிட்டர் மூலம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவே தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சிறப்பு ஐஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள அவர் மீது, துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் எனத்தகவல்கள் கூறுகின்றன. 

Next Story