பட்டியல் இனத்தினர், பழங்குடியினருக்கான தனித்தொகுதி இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது


பட்டியல் இனத்தினர், பழங்குடியினருக்கான   தனித்தொகுதி இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு   நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 12 Dec 2019 11:16 PM GMT (Updated: 13 Dec 2019 12:02 AM GMT)

பட்டியல் இனத்தினர், பழங்குடியினருக்கான தனித்தொகுதி இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் பட்டியல் இனத்தினர் மற்றும் பழங்குடியினருக்கு தனித்தொகுதி ஒதுக்கீடு, 70 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒதுக்கீடு, அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே, இந்த ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை நீட்டிப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா, ஏற்கனவே மக்களவையில் கடந்த 10-ந் தேதி நிறைவேறிவிட்டது.

அதை மாநிலங்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். அதன் மீது நடந்த விவாதத்தில், அவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சற்று நேரத்தில் திரும்பி வந்து ஓட்டெடுப்பில் பங்கேற்றனர்.

கட்சி பாகுபாடின்றி எல்லா கட்சியினரும் ஆதரித்ததால், மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இதன்மூலம் இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது.

“சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தமிழிலும் மொழிபெயர்ப்பு”

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை 9 மாநில மொழிகளில் மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அதிநவீன மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் கூறினார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா, அசாமி, வங்காளம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதாகவும், இது மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார். சுப்ரீம் கோர்ட்டைப்போல், ஐகோர்ட்டுகளும் தங்கள் தீர்ப்பை இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“மின்சார தட்டுப்பாடு இல்லை”

நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை என்று மத்திய மின்துறை மந்திரி ஆர்.கே.சிங் மக்களவையில் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “அதிக மின்சாரம் தேவைப்படும் நேரத்தில் மின்தேவை 183 ஜிகா பைட் ஆகும். ஆனால், அதை விட இரண்டு மடங்கு (365 ஜிகா பைட்) மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் மின்நிலையங்களை நிறுவி உள்ளோம். மாநிலங்கள் தங்கள் சொந்த உற்பத்தி நிலையங்களில் இருந்தும், மத்திய மின்தொகுப்பின் பங்கிலும் மின்சாரம் பெறுகின்றன” என்றார்.

திவால் சட்ட திருத்த மசோதா

திவால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால் தீர்வு நடைமுறையில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்காக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

“எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகள் ஏற்பு”

விவசாயம் தொடர்பான எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின் 201 பரிந்துரைகளில் 200 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தகவலை மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் மக்களவையில் தெரிவித்தார்.

இந்த பரிந்துரைகளில், பயிர்களின் சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதத்துக்கு மேல், குறைந்தபட்ச ஆதார விலை இருக்க வேண்டும் என்பதையும் ஏற்றுள்ளதாக அவர் கூறினார்.

Next Story