குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி: மம்தா பானர்ஜி அறிவிப்பு


குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி: மம்தா பானர்ஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 5:12 PM IST (Updated: 13 Dec 2019 5:12 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளை மீறி அந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். 

இதையடுத்து குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை சட்டம் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 குடியுரிமை திருத்த மசோதாவை எந்த சூழ்நிலையிலும் செயல்படுத்த மேற்கு வங்காள அரசு அனுமதிக்காது. சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாங்கள் ஒரு போதும் என்.ஆர்.சி. சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். 

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நாங்கள் அதனை செயல்படுத்த மாட்டோம்.  பாஜக அல்லாத மாநிலங்களை சட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. குடியுரிமை சட்டம் இந்தியாவை பிளவுப்படுத்தும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மாநிலத்தில் ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story