அரசியல் சாசனப்படி பதவி ஏற்றோர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது; மேற்கு வங்காள கவர்னர்


அரசியல் சாசனப்படி பதவி ஏற்றோர் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது; மேற்கு வங்காள கவர்னர்
x
தினத்தந்தி 14 Dec 2019 4:34 PM GMT (Updated: 14 Dec 2019 4:34 PM GMT)

அரசியல் சாசனப்படி பதவி ஏற்ற எவரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக செயல்பட முடியாது என மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கார் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினரான இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்,  ஜெயின் சமூகத்தினர், பார்சி இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச்சட்டம் 1955ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.  இதனை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சமீபத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளை மீறி அந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. குடியுரிமை சட்டம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெறும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்காளத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் மூர்ஷிதாபாத் மாவட்டங்கள் மற்றும் ஹவுரா கிராம பகுதியிலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.  கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட சீல்டா மற்றும் ஹஸ்னாபாத் பிரிவுக்கு இடையே ரெயில் சேவை முடங்கியது.

முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குடியுரிமை திருத்த சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என்பது உறுதி.  அவற்றை நாங்கள் அனுமதிக்க போவதில்லை.

அதனால் மக்களே தயவு செய்து நீங்கள் சாலை மறியலில் ஈடுபடாதீர்கள்.  சட்டத்தினை கைகளில் எடுத்து கொள்ளாதீர்கள்.

யாரும் இடையூறுகள் எதனையும் உருவாக்கவோ அல்லது எந்த வகையிலான வன்முறையில் ஈடுபடுவதோ வேண்டாமென ஒவ்வொருவரையும் நான் வேண்டி கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தன்கார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாடாளுமன்றம் நமக்கு ஒரு சட்டம் அளித்ததென்றால், அரசியல் சாசன பதவிகளை வகித்து வரும் ஒவ்வொருவரும் குறிப்பிடும்படியாக நான் மற்றும் பிறர் அதன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.  அந்த சட்டமே நமது நாட்டை ஆட்சி செய்யும் விதியாகும்.

இந்த சட்டம் நாடு முழுவதற்கும் பொருந்தும்.  இதன்படி நடக்க முடியாது என்று என்னால் கூற முடியாது.  வேறு எவரும் இதுபோன்று கூற முடியாது.  அரசியல் சாசனப்படி யாரேனும் பதவியேற்று இருக்கிறார்கள் என்றால் அவர்களால், இதற்கு எதிராக செயல்படுவோம் என கூற முடியாது.  இந்த விவகாரம் அரசியலாக்கப்பட கூடாது என ஒவ்வொருவரையும் நான் வேண்டி கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story