காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு 3 மாதம் காவல் நீட்டிப்பு


காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு 3 மாதம் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 9:01 PM GMT)

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு 3 மாதம் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த இந்திய அரசில் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா மற்றும் முக்கிய தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

82 வயதான பரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் குப்கார் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வீடு கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. நேற்று அவரது காவல் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கான பரிந்துரையை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச உள்துறை ஆலோசனை குழு செய்தது.

பரூக் அப்துல்லாவின் காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து இருப்பதை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குறை கூறி உள்ளார்.

“இது மிகவும் வருந்தத்தக்கது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, நமது ஜனநாயகத்தில்தான் இது நடந்துள்ளது” என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

Next Story