மக்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத்


மக்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 15 Dec 2019 2:35 PM GMT (Updated: 15 Dec 2019 2:35 PM GMT)

மக்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

லக்னோ,

குடியுரிமை திருத்த சட்டம் ஆனது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அசாம், மேகாலயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. 

இந்தநிலையில்,  உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மக்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் லக்னோவில் செய்தியாளர்கள் சந்திப்பில்  யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- 

மக்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் எந்தவிதமான சதியையும் நாங்கள் ஏற்க மாட்டோம். முழு நாடும் ஒன்று கூடி என்.ஆர்.சி-க்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார். 

அதேவேளையில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 குறித்து மத்திய அரசையும் அவர் பாராட்டினார்.

Next Story