கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்


கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2019 10:30 PM GMT (Updated: 15 Dec 2019 9:14 PM GMT)

கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கற்பழிப்பு, போக்சோ சட்ட வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக 2000-ம் ஆண்டு முதல் 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.

சமீப காலமாக கொடூரமான கற்பழிப்பு-கொலை சம்பவங் கள், நாட்டில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்படுகிறவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கிற வகையில் விரைவு கோர்ட்டுகள் அமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

அந்த வகையில், 2000-ம் ஆண்டு முதல் கற்பழிப்பு வழக்குகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்ட வழக்குகள் (போக்சோ சட்ட வழக்குகள்) ஆகியவற்றை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க ஏதுவாக நாடு முழுவதும் 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி இந்த கோர்ட்டுகள் ரூ.767 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.474 கோடி ஆகும்.

இந்த விரைவு கோர்ட்டு திட்டத்தை மத்திய நிதி உதவி அடிப்படையில் நீதித்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகங்கள் வகுத்து செயல்படுத்தி உள்ளன.

இந்த தகவல்களை சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின்போது, மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த ஒரு பதிலில் வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில், கற்பழிப்பு, போக்சோ சட்ட வழக்குகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக 218 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும் என அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இப்போது அறிவித்துள்ளார்.

இந்தியாவில் விரைவு கோர்ட்டுகள் 2000-ம் ஆண்டு முதல்தான் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. செசன்ஸ் கோர்ட்டுகளிலும், கீழ்நிலை நீதிமன்றங்களிலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிப்பதுதான் இந்த கோர்ட்டுகளை உருவாக்கு வதின் நோக்கமாக இருந்தது.

நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் மலைபோல 3 கோடி வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

சமீபத்திய புள்ளி விவரங்கள், ஐகோர்ட்டுகளில் மட்டுமே 43 லட்சத்து 20 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறுகின்றன. மேலும், மாவட்ட கோர்ட்டுகளில் 2 கோடியே 69 லட்சம் வழக்குகள் தேங்கிக்கிடப்பதாகவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story