பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் 72 வருடங்களில் திட்டமிட்ட முறையில் வெளியேற்றம்; இந்திய அரசு குற்றச்சாட்டு


பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் 72 வருடங்களில் திட்டமிட்ட முறையில் வெளியேற்றம்; இந்திய அரசு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Dec 2019 2:21 PM GMT (Updated: 17 Dec 2019 2:21 PM GMT)

பாகிஸ்தானில் இருந்து சிறுபான்மையினரை இந்தியாவிற்கு தப்பியோட அந்நாடு திட்டமிட்ட முறையில் கட்டாயப்படுத்தியது என இந்திய அரசு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம் ஆனது பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது, அதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  அவர் தனது டுவிட்டர் பதிவில் மோடி அரசை விமர்சித்து கடுமையாக பதிவிட்டார்.

அதில், இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட மசோதாவுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இந்த மசோதா சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறும் வகையிலும், பாகிஸ்தானுடனான இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது என்று அவரது விமர்சனம் இருந்தது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடந்த உலக அகதிகள் மன்றத்தில் கலந்து கொண்டு கான் பேசும்பொழுது, ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதிகள் விவகாரம், காஷ்மீர் விவகாரம் மற்றும் இந்தியாவில் குடியுரிமை சட்டம் 2019க்கு எதிரான மக்கள் போராட்டம் ஆகியவை பற்றி பேசினார்.

இதுபற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், முற்றிலும் இந்திய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒரு முறை பல்வேறு தரப்பினரும் கூடியுள்ள தளமொன்றில் பொய்களை பேசியுள்ளார்.

இதில் இருந்து அவர் (பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்) உலக அரங்குகளை இதுபோன்று தவறாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்பது உலகம் முழுவதற்கும் தற்போது தெளிவாகி இருக்கும்.

கடந்த 72 வருடங்களில், தனது நாட்டில் வசித்து வந்த சிறுபான்மையின மக்களை திட்டமிட்ட முறையில் அங்கிருந்து தப்பி இந்தியாவிற்கு செல்ல பாகிஸ்தான் கட்டாயப்படுத்தியது.  கடந்த 1971ம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் கிழக்கு பாகிஸ்தானிய மக்களை என்ன செய்தது என்பதனை உலக நாடுகள் மறக்க வேண்டும் என இம்ரான் கான் விரும்புகிறார்.

அந்நாட்டு அரசு தனது சொந்த சிறுபான்மையின மக்கள் மற்றும் சக மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என தெரிவித்து உள்ளது.

Next Story