பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் அந்த இடத்திலேயே சுடுங்கள்; அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தல்


பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் அந்த இடத்திலேயே சுடுங்கள்; அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 Dec 2019 4:08 PM GMT (Updated: 17 Dec 2019 4:08 PM GMT)

மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த சூழலில் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.  

இன்று நண்பகல் 12 மணி அளவில் டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சீலாம்பூர் என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் ஒன்று திரண்டு ஜாப்ராபாத் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணியின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது மேற்கு வங்க மாநிலத்தில் பல ரயில் நிலையங்கள், ரயில்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக கிழக்கு மண்டல ரயில்வே கடந்த சில நாட்களாக ரயில் போக்குவரத்தை பல நகரங்களுக்கு நிறுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் 19 ரயில்களைக் கிழக்கு மண்டல ரயில்வே ரத்து செய்துள்ளது.

 மேற்கு வங்காளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்  ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டவுடன் சுட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாக  மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ளார். 

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சுரேஷ் அங்காடி  கூறியதாவது; - போராட்டத்தில் ரயில்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் அந்த இடத்திலேயே சுடுங்கள் என்று நான் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன்.  மத்திய மந்திரி என்ற அடிப்படையில், நான் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளேன்” என்றார். 

Next Story