மத்திய அரசுக்கு நோட்டீஸ்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மத்திய அரசுக்கு நோட்டீஸ்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2019 6:25 AM GMT (Updated: 18 Dec 2019 10:53 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை இல்லை. இதுதொடர்பான வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 12-ந் தேதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா, சட்டமாகி உள்ளது.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டங்கள், நாடு முழுவதும் பரவி வருகிறது.

இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, காங்கிரஸ் கட்சி, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்க அமைதி கட்சி உள்பட பல்வேறு தரப்பில் 59 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வக்கீல் பல்லவி பிரதாப் தாக்கல் செய்த வழக்கில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த சட்டம், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது, இந்த சட்டத்தின் பலன் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு கிடைக்கிற நிலையில், முஸ்லிம்களுக்கு மறுப்பது வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டும் நோக்த்துடன் கூடியது; இது சமத்துவத்துக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது. மதத்தின் அடிப்படையில் விலக்கு அளிப்பதின்மூலம் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் ஒரு பிரிவினருக்கு குடியுரிமை அளிப்பதை இந்த சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது எனவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது வழக்கில், இந்த சட்டம் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என கூறியுள்ளார்.

இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூரியகாந்த் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்த சட்டமானது, அரசியல் சாசன சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை பரிசீலிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.

வழக்குதாரர்களில் சிலரது சார்பில் ஆஜரான வக்கீல்கள், குடியுரிமை திருத்த சட்டத்தினை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

ஆனால் இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒரு சட்டம் முறைப்படி அறிவிக்கப்பட்ட பின்னர் அதற்கு தடை விதிக்க முடியாது என்று 4 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

அப்போது நீதிபதிகள், நாங்கள் இந்த சட்டத்துக்கு இடைக் கால தடை விதிக்கப்போவது இல்லை என்று அறிவித்தனர்.

அத்துடன், தடை விதிப்பது தொடர்பாக ஜனவரி 22-ந் தேதி நடக்கிற விசாரணையின்போது வாதங்களை முன்வைக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

வழக்குதாரர்களில் ஒருவரது தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டியதில்லை, சட்டத்தின் கீழான விதிகளை உருவாக்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் இன்னும் செய்யப்படவில்லை என்று கூறினார்.

வக்கீல் அஷ்வினி உபாத்யாய், இந்த சட்டத்தின் நோக்கம், பொருள், உள்ளடக்கம் பற்றிய விழிப்புணர்வை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். ஆடியோ, வீடியோ பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் நீதிபதிகள் கூறினர்.

இதை அவர் ஏற்றுக்கொண்டார். அத்துடன், தேவையானதை அரசு செய்யும் என்று குறிப்பிட்டார்.

முடிவில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.

அடுத்த கட்ட விசாரணை, ஜனவரி மாதம் 22-ந் தேதி நடைபெறும்.

Next Story