சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு நிர்பயாவின் தாயார் வரவேற்பு


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு நிர்பயாவின் தாயார் வரவேற்பு
x
தினத்தந்தி 18 Dec 2019 9:25 AM GMT (Updated: 18 Dec 2019 9:30 AM GMT)

நிர்பயா வழக்கில் குற்றவாளியான அக்‌ஷய் குமார், தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி,

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளியான  அக்‌ஷய் குமாரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு  நிர்பயாவின் தாயார் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.  நிர்பயாவின் தாயார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது”என்றார்.


நிர்பயா வழக்கின் விவரம் ; -

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு இளம் பெண், 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்ற இளம் பெண், சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் நாட்டையே  உலுக்கியது.  நிர்பயா என்று குறிப்பிடப்பட்ட அந்த இளம்பெண்ணின், கொலை தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட  6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனிக்கோர்ட்டில் நிர்பயா வழக்கு விசாரணை நடைபெற்றது.  விசாரணையின்போது ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். வழக்கை விசாரித்த தனி கோர்ட்டு, இளம்குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அவர் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனை (தூக்கு) விதித்து தனி கோர்ட்டு 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி தீர்ப்பு அளித்தது. மரண தண்டணை விதிக்கப்பட்ட 4 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 2015-ம் ஆண்டு அந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் அவர்கள் மீதான மரண தண்டனையை 2017-ம் ஆண்டு, மே மாதம் 5-ந்தேதி உறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேரும் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு ஜூலை 9-ந்தேதி தீர்ப்பளித்தது. தொடர்ந்து,  மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து அக்‌ஷய் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவையும் ஏற்க முடியாது என தூக்குத் தண்டனையை  சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

Next Story