முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள், அணு ஆயுத போர் வரும் என்ற இம்ரான்கான் பேச்சுக்கு இந்தியா பதிலடி


முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள், அணு ஆயுத போர் வரும் என்ற இம்ரான்கான் பேச்சுக்கு இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 18 Dec 2019 12:08 PM GMT (Updated: 18 Dec 2019 12:58 PM GMT)

குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் ஏற்படும் என்ற இம்ரான்கானின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் சமீபத்தில் குடியுரிமை சட்டத்திருத்த  மசோதா  நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை பல இடங்களில் காணப்படுகிறது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் கல்லூரியில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பல கல்லூரிகளுக்கு பரவி உள்ளது.

இந்நிலையில், இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற உலகளாவிய அகதிகள் மன்ற கூட்டத்தில் பேசிய இம்ரான்கான்,

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இப்போது குடியுரிமை சட்டம் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்கும். இதன் காரணமாக இந்திய முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானுக்கு வர நேரிடலாம். பாகிஸ்தானால் அதைச் சமாளிக்க இயலாது. இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் தெற்காசியாவில் அகதிகள் நெருக்கடிக்கு  வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல் அணு ஆயுத நாடுகளுக்கிடையில் மோதலைத் தூண்டக்கூடும்.

இந்திய அரசு, காஷ்மீரை ஆக்கிரமித்து உள்ளதோடு அசாமில் முஸ்லிம்கள் குடியுரிமையையும் பறித்து இருக்கிறது என கூறி உள்ளார்.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:-

பாகிஸ்தான் பிரதமரின் அனைத்துக் கருத்துக்கும் இந்தியா பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. இம்ரான்கான், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமல் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர் நிலைமையில் கவனம் செலுத்த வேண்டும்.

பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அண்டை நாடுகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 72 ஆண்டுகளில், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அதன் சிறுபான்மையினர் அனைவரையும் திட்டமிட்டு துன்புறுத்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவுக்கு தப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் ரவீஷ் குமார் விமர்சித்தார்.

Next Story