மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி - மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது


மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி - மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது
x
தினத்தந்தி 18 Dec 2019 11:30 PM GMT (Updated: 18 Dec 2019 10:10 PM GMT)

மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நேற்று உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

டெல்லியில், நிர்பயா என்று அழைக்கப்படும் 23 வயதான துணை மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, பின்னர் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி 12 நாட்களுக்கு பின் மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.

மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களில் அந்த சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கப்பட்டது. இளம் குற்றவாளியான அந்த சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து அவன் பின்னர் விடுதலை ஆனான்.

இதற்கிடையே வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது ராம் சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. அதன்பிறகு, மரண தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அக்‌ஷய் குமார் சிங் தனியாக மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.பானுமதி தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

டெல்லி அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அக்‌ஷய் குமார் சிங்குக்கு ஏற்கனவே மரண தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். அக்‌ஷய் குமார் சிங் தரப்பில் வக்கீல் ஏ.பி.சிங் ஆஜரானார்.

விசாரணைக்கு பின் அக்‌ஷய் குமார் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், அவரது மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், மனுதாரருக்கு மரண தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்றும், எனவே அதை மறுபடியும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்ற 3 பேர் முன்வைத்த வாதங்களையே மனுதாரரும் வைத்து இருப்பதாக அப்போது அவர்கள் குறிப்பிட்டனர்.

அப்போது துஷார் மேத்தா, சட்ட விதிமுறைகளின்படி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்ப மனுதாரருக்கு ஒரு வாரம் அவகாசம் இருப்பதாக கூறினார்.

அக்‌ஷய் குமார் சிங்கின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் வக்கீல் எம்.எல்.சர்மா கூறுகையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பிறகுதான் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.

வழக்கு விசாரணையின் போது நிர்பயாவின் பெற்றோரும் நேற்று கோர்ட்டு அறையில் இருந்தனர். நிர்பயாவின் தாயார் கூறுகையில், அக்‌ஷய் குமார் சிங்கின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

நிர்பயாவின் தந்தை கூறுகையில், ஒட்டு மொத்த தேசமும் நிர்பயாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறது என்றும், 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு விசாரணை கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை தங்களுக்கு திருப்தி ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பவன் குப்தா சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில், வழக்கு விசாரணை அதிகாரிகள் தனக்கு எலும்பு தொடர்பான பரிசோதனை நடத்தவில்லை என்றும், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவம் நடந்த போது தான் சிறுவன் என்றும், எனவே இளஞ்சிறார் சட்டத்தின் பலனை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் கைத் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Next Story