டெல்லி செங்கோட்டை அருகே 144 தடை உத்தரவு ; பேரணி, போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு


டெல்லி செங்கோட்டை அருகே 144 தடை உத்தரவு ; பேரணி, போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 19 Dec 2019 6:14 AM GMT (Updated: 19 Dec 2019 6:14 AM GMT)

டெல்லி செங்கோட்டை அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம் ஆனது, பாகிஸ்தான், வங்காளதேசம்,  ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழக மாணவ-மாணவியர்களும் மற்றும் உத்தரபிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதேபோன்று டெல்லி சீலாம்பூர், ஜாபராபாத்திலும் போராட்டம் நடந்தது.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக லால் குயிலாவில் இருந்து ஷாகீத் பகத் சிங் பூங்கா நோக்கி காலை 11.30 மணியளவில் பேரணி நடைபெற முடிவாகியுள்ளது.  எனினும், இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதேபோன்று மாண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி இன்று மதியம் 12 மணியளவில் எதிர்ப்பு பேரணி நடத்துவதற்கு கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கும் போலீசாரின் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதியருகே 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  போலீசாரின் இந்த உத்தரவின்படி, 4 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவது தடை செய்யப்படுகிறது.

இந்த உத்தரவின் கீழ் லஹோரி கேட், காஷ்மீரி கேட் மற்றும் கொத்வாலி காவல் நிலையங்கள் ஆகிய பகுதிகள் வரும்.  சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரங்களை கவனத்தில் கொண்டு செங்கோட்டை அருகே போராட்டம் நடத்துவதற்கு போலீசார் முன்பே அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் இதனை மீறி பேரணியாக செல்வோம் என கூறியுள்ளனர்.

Next Story