மம்தா பானர்ஜி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்: மே.வங்க ஆளுநர்


மம்தா பானர்ஜி தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்: மே.வங்க ஆளுநர்
x
தினத்தந்தி 20 Dec 2019 3:57 AM GMT (Updated: 20 Dec 2019 3:57 AM GMT)

குடியுரிமை சட்டம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற மம்தா பானர்ஜி தனது கருத்துக்கு அம்மாநில ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கட்சித்தலைவரும், முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பெற்றதற்காக தாங்கள் விரும்பியதெல்லாம் செய்யலாம் என்பது அர்த்தமல்ல. அப்படி பா.ஜனதாவுக்கு துணிச்சல் இருந்தால் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தட்டும். இந்த பொதுஜன வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் பதவி விலக வேண்டும். அதற்கு மத்திய அரசு தயாரா?’ என்று சவால் விடுத்தார். 

மம்தா பானர்ஜியின் இந்த கருத்து அரசியலமைப்புக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ள மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தன்கர், மம்தா பானர்ஜி  தனது பதவியேற்பு உறுதிமொழிக்கு ஏற்ப செயல்பட வேண்டும் எனவும் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 


Next Story