அசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது : முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால்


அசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது : முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால்
x
தினத்தந்தி 20 Dec 2019 6:13 AM GMT (Updated: 20 Dec 2019 8:22 AM GMT)

அசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்று அம்மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது  பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று  பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில்  இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

அசாமில் தற்போது போராட்டங்கள் சற்று ஓய்ந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு செல்போன் இண்டர்நெட் சேவைகள் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், அசாம் முதல் மந்திரி, மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அசாம் முதல் மந்திரி சர்பானந்த சோனோவல் கூறியதாவது:- “ அசாம் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது  என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நமது மொழிக்கோ நமது  அடையாளத்திற்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. எந்த வகையிலும் அசாமின் கவுரவம் பாதிக்கப்படாது. மக்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும்  இருக்கிறது. மக்கள் ஆதரவுடன், அமைதியான வழியில் முன்னேற்றப்  பாதையில் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story