தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்தும் திட்டம் இல்லை : மத்திய அரசு


தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்தும் திட்டம் இல்லை : மத்திய அரசு
x
தினத்தந்தி 20 Dec 2019 7:15 AM GMT (Updated: 20 Dec 2019 7:15 AM GMT)

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விடுபட்டவர்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க  கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும்  என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால், என்.ஆர்.சி பட்டியலை தங்கள் மாநிலத்தில் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு உடனடியாக நாடு முழுக்க செயல்படுத்தப்படாது என்று மத்திய உள்துறை  இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் தயாரிக்கப்பட்டு முஸ்லீம்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று சிலர் தவறான தகவல்களை திட்டமிட்டு பரப்புவதால், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) குறித்து முன்னணி நாளிதழ்களில் விளம்பரங்கள் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story