தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் - வன்முறை நீடிப்பு + "||" + The fight against citizenship law - Extension of violence

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் - வன்முறை நீடிப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் - வன்முறை நீடிப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், வன்முறை நீடித்து வருகிறது. டெல்லியில் ஒரு கார் தீவைத்து எரிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானார்கள்.
புதுடெல்லி,

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் நேற்றும் நீடித்தது. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது. டெல்லி சீலாம்பூர், ஜாப்ராபாத் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.


இதையொட்டி வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளிலும் தடை உத்தரவு அமலில் உள்ளது. 


பீம் ஆர்மி’ என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் டெல்லி ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தருக்கு நேற்று பேரணியாக செல்ல இருந்தார். பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி பேரணி நடைபெறும் என்று அறிவித்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் மதியம் தொழுகை முடிந்ததும் ஜந்தர் மந்தருக்கு பேரணியாக செல்ல ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது ஆசாத்தை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் கோஷத்துடன் ஜந்தர் மந்தர் நோக்கி சென்றனர். அப்போது ஆசாத் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து பேரணியில் புகுந்தார். பேரணியின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டது.

தரியாகஞ்ச் என்ற பகுதியில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்தனர். அப்போது ஆசாத் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனால் போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறியது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலையவில்லை.

அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு காரை தீவைத்து எரித்தனர். சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் இந்தியா கேட் மற்றும் டெல்லி கேட் பகுதிகளில் குழுமி கோஷமிட்டனர். ஜந்தர் மந்தரிலும் சிலர் போராட்டம் நடத்தினார்கள். இந்து அமைப்பினர் சிலர் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் களத்தில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி ஒரே நேரத்தில் டெல்லியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்ததால் போலீசாரால் அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. டெல்லி மாநகரம் தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது.

டெல்லியில் 12 போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு எல்லையில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீலாம்பூர் உள்பட நகரின் முக்கிய தெருக்களில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

போராட்டம் காரணமாக டெல்லியின் பல ரோடுகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. டெல்லியின் பல பகுதிகளில் செல்போன் இணையதள வசதி துண்டிக்கப்பட்டது. 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

உள்துறை மந்திரி அமித்ஷா வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் மகளிர் அணி தலைவரும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகளுமான ஷர்மிஸ்தா முகர்ஜி உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் பெரோசாபாத் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அங்கு ஒரு கும்பல் பல வாகனங்களுக்கு தீவைத்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. நல்பந்த் புறநகர் போலீஸ் நிலையத்தில் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த நாற்காலி, மேஜைகளுக்கு தீவைத்தது. சில போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.

மீரட், முசாபர்நகர் உள்பட பல பகுதிகளில் வன்முறையாளர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஜான்பூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அங்கிருந்த ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். லக்னோ, பெரோசாபாத், கோரக்பூர், பதோஹி, சாம்பல் உள்பட பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினார்கள். அவர்களை கலைக்க தடியடியும், கண்ணீர்புகை குண்டு வீச்சும் நடைபெற்றது.

இந்த போராட்டங்களில் 6 பேர் பலியானார்கள். பிஜ்னோரில் 2 பேரும், மீரட், சாம்பல், பைரோசாபாத், கான்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் இறந்தனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சில இடங்களில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசியதுடன், ரப்பர் குண்டுகளால் தான் சுட்டதாகவும் தெரிவித்தனர். அதேபோல போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் மாநிலத்தில் 50 போலீசாரும் காயம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று 2-வது நாளாக பல இடங்களில் போராட்டமும், வன்முறையும் நடந்தது. சில வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. போலீசார் மீது கல்வீச்சும் நடைபெற்றது. மங்களூருவுக்கு வெளியாட்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து ரெயிலில் வந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர். இணையதள வசதியும் தடை செய்யப்பட்டது.

மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று அமைதி நிலவியது. ஆனாலும் சில பகுதிகளில் இணையதள வசதி தடை செய்யப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் பூ வியாபாரிகள் திடீர் தர்ணா போராட்டம்
திருவண்ணாமலையில் பூ வியாபாரிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கூடுதல் விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யக்கோரி விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
கூடுதல் விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்யக்கோரி மயிலாடுதுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம்: நெல்லை, தென்காசியில் கடையடைப்பு போராட்டம்
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
4. சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு: நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நடந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின. மேலும் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்
கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.