பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போலீசாரால் கைது


பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போலீசாரால் கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 1:29 AM GMT (Updated: 21 Dec 2019 1:29 AM GMT)

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் நேற்றும் நீடித்தது. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது. டெல்லி சீலாம்பூர், ஜாப்ராபாத் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இதையொட்டி வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளிலும் தடை உத்தரவு அமலில் உள்ளது.

பீம் ஆர்மி என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் டெல்லி ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தருக்கு நேற்று பேரணியாக செல்ல இருந்தார். பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி பேரணி நடைபெறும் என்று அறிவித்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் மதியம் தொழுகை முடிந்ததும் ஜந்தர் மந்தருக்கு பேரணியாக செல்ல ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது ஆசாத்தை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் கோஷத்துடன் ஜந்தர் மந்தர் நோக்கி சென்றனர். அப்போது ஆசாத் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து பேரணியில் புகுந்தார். பேரணியின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டது.

தரியாகஞ்ச் என்ற பகுதியில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்தனர். அப்போது ஆசாத் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனால் போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறியது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலையவில்லை.  போலீசாரிடம் இருந்து ஆசாத் மீண்டும் தப்பி சென்றார்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து ஜும்மா மசூதியின் உள்ளே இருந்தபடி பேசிய ஆசாத், நாம் தியாகம் செய்ய வேண்டும்.  அதன்பின்பே இந்த சட்டம் திரும்ப பெறப்படும்.  வன்முறைக்கு நாம் ஆதரவு தெரிவிக்க கூடாது.

நான் வெள்ளி கிழமை காலையில் இருந்து மசூதியின் உள்ளே அமர்ந்திருக்கிறேன்.  எங்களுடைய மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என கூறினார்.  முடியுமென்றால் போலீசார் மசூதிக்குள் வந்து என்னை கைது செய்யட்டும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மசூதிக்கு வெளியே இன்று அதிகாலை ஆசாத் போலீசாரிடம் சரண் அடைந்து உள்ளார்.  அவரை போலீசார் தங்களது காவலில் எடுத்து சென்றுள்ளனர்.  அவர் சரண் அடைவதற்கு முன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டால் சரண் அடைய தயார் என தெரிவித்து இருந்த நிலையில், திடீரென போலீசாரிடம் சரண் அடைந்து உள்ளார்.

Next Story