ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை வெல்லும் -தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு


ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை வெல்லும் -தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 5:28 AM GMT (Updated: 21 Dec 2019 5:28 AM GMT)

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்து உள்ளது.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது பா.ஜனதா ஆட்சி நடைபெறுகிறது.  ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. 81  தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. 5-வது  மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் முடிந்தது. ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்டிரீய ஜனதா தள கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதில் சி - வோட்டர் மற்றும் ஏபிபி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணிக்கு 35 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 32 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்  5 இடங்களை பிடிக்கும் என்றும் மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 9 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இன்டியா கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 50 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவுக்கு 22 முதல் 32 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகள் 9 முதல் 19 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.

கசிஸ் நியூஸ் கருத்துக் கணிப்பைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 37 முதல் 49 இடங்களில் வெல்லக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவுக்கு 25 முதல் 30 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக முடிவு வெளியாகியுள்ளது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் இரண்டு முதல் 4 இடங்களை பிடிக்கக் கூடும். மற்ற கட்சியினரும் 2 முதல் 4 இடங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களில் வென்றிருந்தன.

Next Story