குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5½ லட்சம் நிதியுதவி - டெல்லி வக்பு வாரியம் அறிவிப்பு


குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5½ லட்சம் நிதியுதவி - டெல்லி வக்பு வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 10:13 PM GMT (Updated: 21 Dec 2019 10:13 PM GMT)

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5½ லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பல இடங்களில் வன்முறை அரங்கேறியது. இதில் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் நேற்று முன்தினம் மட்டுமே 11 பேர் இறந்தனர்.

இவ்வாறு உயிர் நீத்தவர்களின் குடும்பத்துக்கு டெல்லி வக்பு வாரியம் சார்பில் தலா ரூ.5½ லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வாரியத்தின் தலைவரும், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுமான அமானத்துல்லா கான் தனது முகநூல் பக்கத்தில் மேலும் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகாவின் மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்களின் தியாகம் நிச்சயம் வீண்போகாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக போலீசாரின் தடியடியில் இடது கண் பார்வையை இழந்த டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், வக்பு வாரியத்தில் நிரந்தர வேலையும் அமானத்துல்லா கான் ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story