“இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி சீரழித்துவிட்டார்” - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


“இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி சீரழித்துவிட்டார்” - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Dec 2019 11:18 AM GMT (Updated: 22 Dec 2019 8:10 PM GMT)

இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சீரழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலர் பலியாகினர்.

எனினும் தற்போது போராட்டத்தின் வேகம் சற்று தணிந்து அமைதி திரும்பி வருகிறது. நேற்று நாடு முழுவதும் அமைதியான வழியில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு தொடர்பாக சிறுபான்மையினர் மற்றும் ஏழை மக்களிடம் எதிர்க்கட்சிகள் பொய்பிரசாரம் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகிய இருவரும் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அன்பான இந்திய இளைஞர்களே மோடி மற்றும் அமித்ஷா உங்களின் எதிர்காலத்தை சீரழித்துவிட்டனர். வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் அவர்கள் ஏற்படுத்திய சேதம் தொடர்பான உங்களின் கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவேதான் அவர்கள் உங்களை திசை திருப்பிவிட்டு, வெறுப்புணர்வுக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு இந்தியர்கள் மீதும் நாம் அன்பு செலுத்தினால் மட்டுமே மோடி, அமித்ஷாவின் சதியை முறியடித்து அவர்களை தோற்கடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதுமட்டும் இன்றி நாட்டில் நிலவும் பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமித்ஷாவே காரணம் எனவே அக்கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அனந்த் சர்மா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பிறகு நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதே நாட்டில் நிலவும் பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்கு காரணமாகி இருக்கிறது” என்றார்.

மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உண்மையிலேயே கவலை கொண்டிருக்கிறார் என்றால், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் டெல்லிக்கு வரவழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனவும் கூறினார்.

Next Story