வெளிநாட்டு பயணிகளின் பீதி: நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் சுற்றுலாத்துறை பாதிப்பு


வெளிநாட்டு பயணிகளின் பீதி: நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் சுற்றுலாத்துறை பாதிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 8:31 PM GMT (Updated: 22 Dec 2019 8:31 PM GMT)

நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் வெளிநாட்டு பயணிகள் பீதியடைந்துள்ளனர். இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறுவதால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு பதற்றத்தை கூட்டுகின்றன.

இந்த போராட்டங்கள் தொடர்வதால் இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அந்தந்த நாடுகள் எச்சரிக்கை அறிவுறுத்தல்களை விடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளன. இதனால் இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இந்திய டிராவல் ஏஜெண்டுகளின் சங்க தலைவர் ஜோதி மயால் கூறுகையில், “இந்தியாவின் தற்போதைய நிலவரம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பார்த்து பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எங்களை அச்சத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். எனினும் இதுவரை பெரிய அளவில் சுற்றுலா திட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் இந்த நிலை தொடர்ந்தால், அதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நிலைமை இப்படி என்றால், இந்திய மக்கள் உள்நாட்டு பகுதிகளை விட்டுவிட்டு வெளிநாட்டு சுற்றுலாவை அதிகமாக தேர்வு செய்வதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்திய சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story