இந்திய வெளியுறவு செயலாளராகிறார் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா; மத்திய அரசு அறிவிப்பு


இந்திய வெளியுறவு செயலாளராகிறார் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா; மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 4:18 PM GMT (Updated: 23 Dec 2019 4:18 PM GMT)

இந்திய வெளியுறவு செயலாளர் பதவிக்கு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே பதவி வகித்து வருகிறார்.  இவர் வருகிற ஜனவரியில் ஓய்வு பெறுகிறார். இதனால் அந்த பதவிக்கு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் பதவியை வகித்து வரும் ஷிரிங்லா, வருகிற 2020ம் ஆண்டு ஜனவரி 29ந்தேதி புதிய வெளியுறவு செயலாளராக பதவி ஏற்று கொள்கிறார்.

டெல்லியிலுள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்துள்ள அவர் கடந்த 1984ம் ஆண்டு இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்துள்ளார்.  அதற்கு முன் இந்தியாவில் கார்ப்பரேட் மற்றும் பொது துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  இவருக்கு ஹேமல் ஷிரிங்லா என்ற மனைவியும் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.

இதன்பின்பு வங்காளதேசத்திற்கான இந்திய தூதர், தாய்லாந்து அரசுக்கான இந்திய தூதர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். பிரான்ஸ் (யுனெஸ்கோ), அமெரிக்கா (ஐ.நா. சபை, நியூயார்க்), வியட்னாம் (ஹனோய் மற்றும் ஹோ சி மின் சிட்டி), இஸ்ரேல் மற்றும் தென்ஆப்பிரிக்கா (டர்பன்) ஆகிய நாடுகளிலும் அவர் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்பட பிரெஞ்சு, வியட்னாமீஸ், நேபாளீஸ் ஆகிய மொழிகளிலும் பேச கூடிய திறன் பெற்றவர் ஆவார்.

Next Story