கடும் பனிப்பொழிவு எதிரொலி; பிற பகுதிகளில் இருந்து, காஷ்மீர் 3-வது நாளாக துண்டிப்பு


கடும் பனிப்பொழிவு எதிரொலி; பிற பகுதிகளில் இருந்து, காஷ்மீர் 3-வது நாளாக துண்டிப்பு
x

காஷ்மீர் முழுவதும் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு பனித்துகள்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் காஷ்மீர் முழுவதும் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து 3-வது நாளாக மூடப்பட்டு உள்ளது. இந்த சாலையில் டிக்டோல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலையின் ஒரு பகுதி முற்றிலும் அடித்துச்செல்லப்பட்டு உள்ளது.

 சாலை மூடப்பட்டு உள்ளதால் ஒட்டுமொத்த காஷ்மீரும் நாட்டின் பிற பகுதிகளைவிட்டு துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கியுள்ளன. பயணிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் காத்துக்கிடக்கும் இந்த வாகனங்கள் பல நாட்களாக சிக்கியிருப்பதால் டிரைவர்கள் மற்றும் பயணிகள் பெருத்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

சாலையில் கொட்டிக்கிடக்கும் பனித்துகள்களை நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் சாலையில் சிக்கியிருக்கும் வாகனங்கள் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story