காங். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ராகுல் காந்தி நன்றி


காங். போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுக்கு ராகுல் காந்தி நன்றி
x
தினத்தந்தி 24 Dec 2019 7:55 AM GMT (Updated: 24 Dec 2019 7:55 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் காங்கிரசார் போராட்டம் நடத்திய நிலையில், கட்சியின் தேசிய தலைவர்கள் பெரும்பாலும் போராட்டங்களில் பங்கேற்காமல் இருந்தனர். தற்போது அவர்களும் நேற்று குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர்.

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் ‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ என்ற பெயரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும், ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ராஜ்காட்டில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Next Story