மராட்டிய மாநில துணை முதல்வராகும் அஜித் பவார்?


மராட்டிய மாநில துணை முதல்வராகும் அஜித் பவார்?
x
தினத்தந்தி 25 Dec 2019 6:18 AM GMT (Updated: 25 Dec 2019 6:18 AM GMT)

மராட்டிய மாநில அடுத்த துணை முதல்வராகும் வாய்ப்பு அஜித் பவாருக்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

மந்திரி சபை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் பாரதீய ஜனதா ஆளும் கட்சிகள் மீது கேள்வி கணைகளை தொடுத்தது.

நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அது நடைபெறவில்லை. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

அவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். மந்திரி சபை விரிவாக்கம் குறித்து அவர்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகின.  வரும் 30-ந் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் பவார் ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
 
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திலீப் வால்ஸ் பாட்டீலுக்கு உள்துறை பொறுப்பு செல்லக்கூடும். அதே நேரத்தில் அஜித் பவார், இரண்டு துறைகளின் பொறுப்போடு துணை முதல்வராகலாம் என கூறப்படுகிறது.

அஜித் பவாரை மந்திரி சபையில்  சேர்க்காமல்  மராட்டிய அரசாங்கத்தில் எந்தவொரு விரிவாக்கமும் சாத்தியமில்லை. அவர் நிச்சயமாக விரிவாக்கம் செய்யப்பட்ட மந்திரி சபையில் ஒரு பகுதியாக இருப்பார் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் கூறி உள்ளார்.

Next Story