பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பெட்ரோல் வெடிகுண்டு போன்றவர்கள்- பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து


பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பெட்ரோல் வெடிகுண்டு போன்றவர்கள்- பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 25 Dec 2019 7:28 AM GMT (Updated: 25 Dec 2019 7:28 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பெட்ரோல் வெடிகுண்டு போன்றவர்கள் என்று பாஜக மூத்த தலைவரும் அரியானா அமைச்சருமான அனில் விஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் , தமிழ்நாடு  உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 16 பேர் பலியானார்கள்.

இதில் மீரட் நகரில் நடந்த கலவரத்தில் பலியான ஒருவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் சென்றனர். அப்போது அவர்கள் இருவரையும் மீரட் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் போலீசாரிடம், எங்களால் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு இருவரும் பொறுப்பேற்கிறோம் என தெரிவித்து அறிக்கை அளித்ததால் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அரியானா அமைச்சர் அனில் விஜ், ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் " காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும், உயிருள்ள பெட்ரோல் வெடிகுண்டு என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் இருவரும் எங்குச் செல்கிறார்களோ அந்த இடத்தில் இவர்கள் பேசும் நெருப்பு வார்த்தைகளால் பதற்றமும், கலவரமும் ஏற்பட்டு பொதுச்சொத்துக்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்

அரியானா அமைச்சர் அனில் விஜ் இதுபோல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல்முறை இல்லை, இதற்கு முன் மேற்கு வங்காள  முதல்வர் மம்தா பானர்ஜியை மனநிலை சரியில்லாதவர் என்று பேசி உள்ளார்.

Next Story