உ.பி.யில் போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்கள் சேதம் ; இழப்பீடு கோரி 130 பேருக்கு நோட்டீஸ்


உ.பி.யில் போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்கள் சேதம் ; இழப்பீடு கோரி 130 பேருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 26 Dec 2019 5:35 AM GMT (Updated: 26 Dec 2019 5:35 AM GMT)

உத்தர பிரதேசத்தில் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் பொதுச்சொத்துக்களும் சூறையாடப்பட்டன.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.  லக்னோவிலும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு ஒரு போலீஸ் நிலையம், வெளியே நின்றிருந்த வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியும், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீவைத்தும் ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டது. தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது.  இதில், 15 பேர் கொல்லப்பட்டனர். 

மேலும், போராட்டம் நடத்தியவர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர். அரசு வாகனங்கள், சொத்துக்களை தீ வைத்தும் கொளுத்தினர். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 

‘போராட்டத்தின்போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்று, அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ஈடு செய்யப்படும்’  என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இதன்படி, ரூ.50 லட்சம்  மதிப்புடைய பொதுச்சொத்துக்களின் சேதத்திற்கு இழப்பீடு கேட்டு, 130 பேருக்கு மாவட்ட நிர்வாகங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. ராம்பூர் மாவட்டத்தில் 28 பேருக்கும், சம்பல் மாவட்டத்தில் 26 பேருக்கும், பிஜ்னோர் மாவட்டத்தில் 43 பேருக்கும் கோரக்பூர் மாவட்டத்தில் 33 பேருக்கும் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரகளையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், இவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதை தவிர்க்க பணம் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிசிடிவி காட்சிகளில் வன்முறையில் ஈடுபட்டது ஊர்ஜிதமானவர்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

Next Story