நாட்டில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்; தமிழகத்திற்கு 2-வது இடம்


நாட்டில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்; தமிழகத்திற்கு 2-வது இடம்
x
தினத்தந்தி 26 Dec 2019 1:47 PM GMT (Updated: 26 Dec 2019 1:47 PM GMT)

நாட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகம் ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் துன்புறுத்தலில் இருக்கும் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான தொலைபேசி அவசர சேவையை சைல்டுலைன் என்ற அமைப்பு வழங்கி  வருகிறது. இதற்காக 1098 என்ற தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளது.  நாடு முழுவதும் 522 மாவட்டங்கள் மற்றும் 100 ரெயில் நிலையங்களை உள்ளடக்கி இந்த அமைப்பு சேவை வழங்குகிறது.

இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் ஆதரவு வழங்கி வருகிறது. குழந்தைகளுக்கு சேவையளிக்கும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள 2018-19ம் ஆண்டுக்கான தகவலில், நாட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகம் ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடத்தில் உள்ளது என தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து தமிழகம் மற்றும் மராட்டியம் முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.

இதன்படி கேரளாவில் 1,742 புகார்களும், தமிழகத்தில் 985 புகார்களும் மற்றும் மராட்டியத்தில் 443 புகார்களும் பதிவாகி உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதிலும் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மொத்தம் 7,684 உள்ளன. இவற்றில் 35 சதவீதத்தினர் அண்டை வீடுகளில் வசிப்பவர்களாக உள்ளனர். இதுதவிர்த்து, வளர்ப்பு பெற்றோர், நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், வழிபோக்கர்கள் மற்றும் பிறர் 75 சதவீதம் உள்ளனர்.

இவர்களில் பிறர் என்ற பிரிவில் வேலை வழங்கும் முதலாளிகள், குழந்தை பராமரிப்பாளர்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story