உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கம்


உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கம்
x
தினத்தந்தி 27 Dec 2019 4:34 AM GMT (Updated: 27 Dec 2019 4:34 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

லக்னோ,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில்  பல நகரங்களில்  கடந்த 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை தலை விரித்தாடியது. 

ஏராளமான பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. அவற்றில் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்  ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் பலியாகினர்.  

கடந்த சில தினங்களாக உத்தர பிரதேசத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், இன்று மீண்டும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.  போராட்டம் துவங்க உள்ளதாக கூறப்படுவதால் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.  

கலவரம் பரவாமல் தடுக்க காசியாபாத், ஆக்ரா, மீரட், முஷாபர்நகர், அலிகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில்  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இணையசேவை   முடக்கப்பட்டுள்ளது.  எனினும் தலைநகர் லக்னோவில் இணைய சேவை முடக்கப்படவில்லை.  எனினும், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துக்களை தீவிரமாக கண்காணிப்போம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரக்பூர் போன்ற பதற்றமான இடங்களில், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். 

Next Story