நிதி நெருக்கடியால் பயணிகள் ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு?


நிதி நெருக்கடியால் பயணிகள் ரெயில் கட்டணம்  உயர வாய்ப்பு?
x
தினத்தந்தி 27 Dec 2019 6:55 AM GMT (Updated: 27 Dec 2019 7:31 AM GMT)

நிதி நெருக்கடியால் பயணிகள் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வாரியத் தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரெயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது:-

ரெயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் முறைப்படுத்தப்படும். இது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் அது பற்றி என்னால்  மேலும் ஒன்றும் கூற முடியாது.

கட்டணங்களை உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை. கட்டணத்தை சீராய்வு  செய்வது பற்றி ஆலோசிக்கப்படுகிறது., இதன் பொருள் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல, குறையவும் கூடும். 

சரக்குக் கட்டணங்கள் ஏற்கனவே அதிகமாக இருந்தாலும், சரக்குகளை அனுப்ப சாலைப்போக்குவரத்தை பயன்படுத்துபவர்களை ரெயில்களை நோக்கி வரச்செய்வதே தங்களின் இலக்கு. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரெயில்வே துறை, பயணிகள் ரெயில்களை பொறுத்தவரையில் 155 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

அதேபோன்று, சரக்கு ரெயில்களை பொறுத்தவரையில் கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டோடு ஒப்பிடும்போது 3,901 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு போன்று ரெயில்வே அதிகாரிகளுக்கான தேர்வு நடத்தப்படும்.  முதற்கட்டமாக ஐந்து பிரிவுகளில் 2021ம் ஆண்டில் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
ஊழியர்களின் ஊதியம் உள்பட ஆண்டுக்கு 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் ரெயில்வே துறைக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது என கூறினார்.

கட்டணம் உயர்த்தப்படும் என வி.கே.யாதவ் உறுதியாக கூறாத நிலையிலும், நஷ்டம் காரணமாக கட்டணத்தை உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 20 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Next Story