ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பாஜக தலைவர் ராம் மாதவ்


ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பாஜக தலைவர் ராம் மாதவ்
x
தினத்தந்தி 28 Dec 2019 8:25 AM GMT (Updated: 28 Dec 2019 8:25 AM GMT)

ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இரு யூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநர் நிர்வாகங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் வன்முறை வெடிக்காமல் இருப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரான பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது, காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சென்ற பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 

“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு பாஜக ஆதரவாக உள்ளது. இங்குள்ள சூழல் ஒத்துழைக்கும் பட்சத்தில் விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். இங்குள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சட்ட ரீதியிலான நிலையை  பாகிஸ்தானால் மாற்ற இயலாது.  எல்லையில் நமது படைகள் தயார் நிலையில் உள்ளன. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.  

சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ -ரத்து செய்யப்பட்ட  துணிச்சலான நடவடிக்கையை நாடு முழுக்க உள்ள மக்கள் வரவேற்கின்றனர். இந்த ஐந்து மாதங்களில் ஜம்மு காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் மிகவும் அமைதியாக உள்ளது. பொதுமக்களில் ஒருவர் கூட வன்முறையால் இறக்கவில்லை.  கல்வீச்சு சம்பவங்களும் கணிசமாக குறைந்துள்ளன. லே பகுதியை தொடர்ந்து கார்கில் பகுதியிலும் இணைய தள சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஜம்மு காஷ்மீர் பிராந்திய பகுதிகளிலும் இணையதள சேவை வழங்கப்படும்” என்றார்.

Next Story