வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை


வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2019 9:19 PM GMT (Updated: 28 Dec 2019 9:19 PM GMT)

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பெங்களூரு,

சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் வைத்துள்ளார். நித்யானந்தா தொடர்பான பல்வேறு வழக்குகளை கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் சீடரை கற்பழித்த வழக்கு தொடர்பாக நித்யானந்தா மீது ராமநகர் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நித்யானந்தா, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவர் ஈக்குவடார் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்கிடையே, தமிழ்நாடு திருச்சி நாவலூர் குட்டபட்டு மேலத்தெருவை சேர்ந்த ஜான்சி ராணியின் மகள் சங்கீதா கடந்த 2014-ம் ஆண்டு பிடதி ஆசிரமத்தில் இறந்தார். இவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக ஜான்சி ராணி குற்றம்சாட்டினார். சங்கீதாவின் மர்ம சாவு பற்றிய விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சங்கீதா சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜான்சிராணி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக அரசுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா வெளிநாட்டில் உள்ளார். நித்யானந்தாவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக நித்யானந்தா மீது சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பெற வேண்டும். அதன்பிறகு நித்யானந்தா வழக்கை விசாரிக்கும் விசாரணை அமைப்பு அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் மத்திய விசாரணை அமைப்புக்கு அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ‘இண்டர்போல்’ மூலம் நித்யானந்தாவுக்கு எதிராக ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்கப்படும். இதையடுத்து நித்யானந்தா இருக்கும் இடம் தெரிந்தவுடன் அவரை நாடு கடத்த வெளியுறவுத்துறை உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். எனவே, நித்யானந்தா வழக்கில் கர்நாடக மாநில விசாரணை அமைப்பு உடனடியாக நித்யானந்தாவுக்கு எதிராக ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story