மராட்டிய மந்திரி சபையில் இடம் கிடைக்காததால் சிவசேனாவில் அதிருப்தி - சஞ்செய் ராவத்
மந்திரி சபையில் இடம் கிடைக்காததால் சிவசேனாவில் அதிருப்தி கிளம்பி உள்ளது. பதவி ஏற்பு விழாவை புறக்கணித்தது குறித்து சஞ்சய் ராவத் எம்.பி. விளக்கம் அளித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி பதவி ஏற்றது. அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில், ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் மராட்டிய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் மொத்தம் 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகன் 29 வயதான ஆதித்ய தாக்கரேவுக்கு மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. மராட்டிய மந்திரி சபை வரலாற்றில் ஒரே நேரத்தில் தந்தை, மகன் பதவி வகிப்பது என்பது இதுவே முதல் முறை ஆகும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவசேனா முன்னாள் மந்திரிகள் ராம்தாஸ் கதம், திவாகர் ராவ்தே, ரவீந்திரவாய்க்கர், தீபக் கேசர்கர், தானாஜி சாவந்த் உள்ளிட்டோருக்கு மந்திரிசபையில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப் படுகிறது.
மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியில் பங்கு தந்தால் மட்டுமே பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்று உறுதிப்பட சொன்னவர், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத். சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு அமைய இவர் தான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத் மந்திரி சபையில் இடம் பெறுவார் என கூறப்பட்டது. ஆனால் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி காரணமாக நேற்றுமுன்தினம் நடந்த புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் சஞ்சய் ராவத் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர்களுக்கு மந்திரி சபையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்து உள்ள சஞ்சய் ராவத் எம்.பி., “மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு அமைய ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சிகள் மற்றும் புதுமுகங்களுக்கு மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்க வேண்டியது இருந்தது” என்றார்.
மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி கேட்டதற்கு, சாம்னா பத்திரிகை அலுவலகத்தில் எனது பணியை செய்து கொண்டு இருந்தேன் என்று சஞ்சய் ராவத் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story