கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு


கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2020 4:00 AM IST (Updated: 2 Jan 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வகையில் விதிமுறைகளை திருத்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி, 

கேபிள் இணைப்புகள் மூலம் தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை பார்க்கும் வகையில் விதிமுறைகளை திருத்தி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, கேபிள் வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் அதிகபட்சமாக ரூ.160-க்குள் சேனல்களை வழங்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கூடுதல் இணைப்புகளுக்கு அதிகபட்சமாக 40 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைப்போல நெட்வொர்க் திறன் கட்டணமாக 200 சேனல்களுக்கு ரூ.130 (வரி நீங்கலாக) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய தகவல், ஒளிபரப்புத்துறையால் கட்டாய சேனலாக அறிவிக்கப்பட்டுள்ள சேனல்கள் இந்த பட்டியலில் அடங்காது.

6 மாதம் அல்லது அதற்கு மேலான நீண்டகால சந்தாதாரர்களுக்கு தள்ளுபடி வழங்குவதற்கு வினியோக தள ஆபரேட்டர்களுக்கு டிராய் அனுமதி அளித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்கும் சேனல்களின் கட்டணம், மொத்த தொகுப்பு சேனல்களின் கட்டணத்தைவிட 1½ மடங்குக்கு மேல் இருக்கக்கூடாது.

இவ்வாறு விதிமுறைகளை திருத்தி வெளியிட்டுள்ள டிராய், இந்த விதிமுறைகள் அனைத்தும் மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

Next Story