அதிகப்படியான சர்க்கரை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும்! -ஆய்வில் அதிர்ச்சி தகவல்


அதிகப்படியான சர்க்கரை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும்! -ஆய்வில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2020 11:04 AM GMT (Updated: 3 Jan 2020 11:35 AM GMT)

அதிகப்படியான சர்க்கரை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

புதுடெல்லி

பிஎல்ஓஎஸ் உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக சர்க்கரை  சேர்த்து கொண்டால் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதிக சர்க்கரை சாப்பிட்டால் விந்தணுக்களின் தரம் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது.

ஸ்வீடனில் உள்ள லிங்கோப்பிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு குழுவினர்  முன்னணி எழுத்தாளர் அனிதா ஓஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.  ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விந்தணுக்களில் இருக்கும் ஆர்.என்.ஏ கூறுகள்  (RNA fragments) என்பது மரபணு தொடர்புடையது. இது அளவுக்கு அதிகமான சர்க்கரையை உட்கொண்டால் பாதிக்கப்படுகிறது  இதற்காக 15 ஆண்கள் அதுவும் புகை பழக்கம் இல்லாத ஆண்களை தேர்வு செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அதிக சர்க்கரைக் கொண்ட குளிர்பானங்களை தினமும் 3.5 லிட்டர்கள் அல்லது 450 கிராம் மிட்டாய்களுக்கு ஒத்த சர்க்கரை கொடுக்கபட்டது.  இவ்வாறு தொடர்ந்து குளிர்பானங்களை குடித்து வந்ததால் அவர்களின் விந்தணுக்களின் இயக்கம் குறைந்துள்ளது. இந்த விந்தணு இயக்கம்தான் அதன் தரத்தையும் தீர்மானிப்பது ஆகும் . எனவே அதுவே சரியாக செயல்படாமல் போவதால் அதன் தரமும் குறைவாகவே இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த ஆர்.என்.ஏ கூறுகள்  மனிதர்கள், பழ ஈக்கள் மற்றும் எலிகள் உட்பட பல உயிரினங்களின் விந்தணுக்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உள்ளன.

பல சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படலாம், அவற்றில் உடல் பருமன் மற்றும் தொடர்புடைய நோய்களான டைப் 2 நீரிழிவு போன்றவை விந்தணுக்களின் தரத்திற்கு நன்கு அறியப்பட்ட ஆபத்து காரணிகளாகும்.

மேலும் இது தீர்க்க முடியாத விஷயமல்ல. தம்பதிகள் உடனே உணவு முறையை மாற்றி சர்க்கரை அளவைக் குறைத்துக் கொண்டாலே இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story